ஆடி மாதம் தமிழர்களின் மதச்சார்ந்த வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, ஆடி அமாவாசை தினம், அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு நாளாகவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கான புனித நாளாகவும் கருதப்படுகிறது.
இந்த நாளில், பெரும்பாலான பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் அம்மன் கோவில்களை நோக்கி பயணிக்கின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோவிலில், சாதாரண அமாவாசைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று நள்ளிரவிலிருந்தே பக்தர்கள் வெள்ளம் குவிந்தது.
3 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசை :
அதிகாலை முதலே திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
நேர்த்திக்கடன்கள் செலுத்தல் :
பாத யாத்திரையாகவும், தனிப்பட்ட வாகனங்கள், பேருந்துகள் மூலம் வந்த பக்தர்கள், தீச்சட்டி ஏந்தல், மொட்டை அடித்தல், துலாம் பாரம், அழகு குத்துதல் போன்ற பலவகை நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் கூல் மற்றும் பானகம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் :
பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரளும் நிலையில், கோவிலில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டனர்.