கோவை மாநகரில் சட்டம்-ஒழுங்கு குறித்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், பழைய கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர் ஒருவர் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கோவை கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த ‘ஜப்பான்’ என்கிற பிரவீன் குமார் (24) என்பவரே இந்தப் பழிவாங்கும் படலத்திற்குப் பலியானவர் ஆவார். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2024-ஆம் ஆண்டு செல்வபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கோஷ்டி மோதலில், கோகுல் கிருஷ்ணன் என்ற இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த பிரவீன் குமார், உயிருக்குப் பயந்து மைசூரில் உள்ள தென்னை நார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 7:30 மணியளவில் கோவை திரும்பிய அவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து கெம்பட்டி காலனி, அசோக் அவென்யூ, பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு முட்புதர் மறைவில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அவரைத் தேடி வந்த நான்கு பேர் கொண்ட மர்மக் கும்பல், பிரவீன் குமாரிடம் திடீரெனத் தகராறில் ஈடுபட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை எடுத்த அந்த கும்பல், பிரவீன் குமாரை நிலைகுலையச் செய்தது.
தலை மற்றும் கை பகுதிகளில் சரமாரியாக வெட்டப்பட்டும், கற்களால் தாக்கப்பட்டும் ரத்த வெள்ளத்தில் துடித்த பிரவீன் குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்ததை உறுதி செய்துகொண்ட அந்த மர்மக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செல்வபுரம் போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் சோதனைகளை மேற்கொண்டனர். பிரவீன் குமாரின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், இக்கொலைச் சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்பது தெரியவந்துள்ளது. 2024-ல் கொல்லப்பட்ட கோகுல் கிருஷ்ணனின் நண்பர்கள் அல்லது உறவினர்களே, பிரவீன் குமார் ஊருக்குத் திரும்பியதைத் தெரிந்துகொண்டு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தப்பியோடிய நான்கு பேர் கொண்ட கும்பலைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நகரின் முக்கிய இடங்களிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மது அருந்திய இடத்தில் நடந்த இக்கொலைச் சம்பவம், கோவையில் மீண்டும் ரவுடிகளுக்கிடையேயான மோதல் தலைதூக்குகிறதோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

















