கோவை பூ மார்க்கெட் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பூ கடைகள் அமைந்துள்ளது. இந்த கடைகளுக்கு ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் தினசரி பூ வாங்க பூ மார்கெட் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பூக்கடைக்கு பூ வாங்க சிலிவ் லெஸ் சுடிதார் அணிந்து வந்த மாணவி ஒருவரிடம் அங்கிருந்த பூ கடை உரிமையாளர் , இப்படியெல்லாம் உடை அணிந்து வரக்கூடாது என பேசியதாக கூறப்படுகிறது.
அதற்கு அந்த பெண் உடை குறித்து கேள்வி எழுப்பிய நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடை சரியாகத்தான் இருக்கிறது, உங்களது பார்வையை சரியாக வைத்துக் கொள்ளுங்கள் என அந்த பூக்கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை அந்த பெண்ணுடன் வந்த நபர் செல்போனில் பதிவு செய்தார்.
இதனையடுத்து பூ மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகள் ஒன்று சேர்ந்து அந்த பெண்ணுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே சட்ட மாணவி பெயர் ஜனனி என்பதும், தற்போது வைசியாக்கில் எல்.எல்.பி முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து இன்று புகார் அளிக்க மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்ததாகவும், காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் இல்லாததால் நாளை புகார் அளிக்க இருப்பதாகவும் சட்ட மாணவி ஜனனி தெரிவித்தார்.