விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆவுடையப்பன் என்பவரின் மனைவி தேவமனோகரி (64), சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு நான்கு நோயாளிகளுக்குப் புதிய வாழ்வைத் தந்துள்ளன. கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி இரவு சுமார் 7:35 மணியளவில் தேவமனோகரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக டிசம்பர் 14-ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று அதிகாலை அவர் மூளைச்சாவு நிலையை அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தனது மனைவியின் இழப்பால் வாடிய நிலையிலும், பிற உயிர்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க கணவர் ஆவுடையப்பன் முன்வந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அறுவை சிகிச்சை மூலம் தேவமனோகரியின் உறுப்புகள் எடுக்கப்பட்டன. இதில் கல்லீரல் திருச்சி அப்போலோ மருத்துவமனைக்கும், இரண்டு சிறுநீரகங்கள் திருச்சி காவேரி மருத்துவமனை மற்றும் முருகன் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன. அவரது கண்கள் (கருவிழிகள்) மதுரை அரசு மருத்துவமனைக்கே தானமாக வழங்கப்பட்டன.
உறுப்பு தானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்த தேவமனோகரியின் உடலுக்கு மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள்சுந்தரேஷ்குமார், நிலைய மருத்துவ அலுவலர்கள் சரவணன், முரளிதரன் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மலர் வளையம் வைத்து அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். துயரமான சூழலிலும் மனிதாபிமானத்துடன் எடுக்கப்பட்ட இந்த முடிவு, சமூகத்தில் உடல் உறுப்பு தானத்தின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
