மயிலாடுதுறை மாவட்டம் கிளியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 34 ஆண்டுகள் பணியாற்றி, பணி ஓய்வு பெற்ற ஊழியருக்கு வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர் மற்றும் சக ஊழியர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 34 ஆண்டுகளாக பல்நோக்கு மருத்துவ பணியாளராக பணியாற்றியவர் மாசிலாமணி. 1992 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், இன்றுவரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத நேரங்களில், தானே ஒரு மருத்துவரை போன்று நோயாளிகளிடம் அனுசரணையாக பேசி, சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அவர் பணி ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மதுமதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் கோபி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவருக்கு கண்ணீருடன் பிரியாவிடை அளித்து, அவரது வீடு வரை அழைத்துச் சென்று விட்டு வந்தனர்.
