தமிழகத்தின் தொழில் நகரமான திருப்பூர், தற்போது புத்தகங்களின் வாசனை கமழும் அறிவு நகரமாக உருமாறியுள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு மற்றும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் ஆகியவை ஒன்றிணைந்து நடத்தும் ‘திருப்பூர் புத்தகத் திருவிழா’, திருப்பூர் வேலன் ஓட்டல் வளாகத்தில் மிக விமரிசையாகத் தொடங்கியது. இந்த அறிவுசார் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே ஐ.ஏ.எஸ். அவர்கள் குத்துவிளக்கேற்றி, நாடாவினை வெட்டி முறைப்படி தொடங்கி வைத்தார். பின்னலாடைத் தொழிலில் உலகப்புகழ் பெற்ற திருப்பூரில், உழைக்கும் மக்களின் கைகளிலும், மாணவச் செல்வங்களின் மனங்களிலும் புத்தகங்களைச் சென்றடையச் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்தத் திருவிழா முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடக்க விழாவில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கலந்துகொண்டு, திருப்பூரின் வளர்ச்சிக்கு அறிவுசார் தேடல் எவ்வளவு அவசியம் என்பது குறித்து உரையாற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சியின் மண்டலத் தலைவர்கள் கோவிந்தசாமி, கோவிந்தராஜ் மற்றும் இந்தத் திருவிழாவின் ஒருங்கிணைப்பில் முக்கியப் பங்காற்றிய பின்னல் புக் டிரஸ்ட் அமைப்பின் இரா. ஈஸ்வரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். வேலன் ஓட்டல் வளாகமே புத்தகப் பிரியர்களின் வரவால் திருவிழா கோலம் பூண்டிருந்தது.
இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் முன்னனிப் பதிப்பகங்கள் முதல் சிறிய பதிப்பகங்கள் வரை நூற்றுக்கணக்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வரலாறு, இலக்கியம், அறிவியல், தற்கால அரசியல், ஆன்மீகம் மற்றும் சுய முன்னேற்ற நூல்கள் எனப் பல லட்சக்கணக்கான புத்தகங்கள் வாசகர்களுக்காகக் குவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைக் கவரும் வகையில் கல்வி சார்ந்த நூல்களுக்கும், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டிப் புத்தகங்களுக்கும் தனிப்பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் யுகத்திலும் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தத் திருவிழா வடிவமைக்கப்பட்டுள்ளது.
புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, தினந்தோறும் மாலையில் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாசகர்கள் எவ்வித சிரமமும் இன்றி புத்தகங்களை வாங்கிச் செல்ல மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அறிவுத் தேடலும், உழைப்பும் இணைந்தால் மட்டுமே ஒரு சமூகம் முழுமையான வளர்ச்சி அடையும் என்பதைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள இந்தத் திருப்பூர் புத்தகத் திருவிழாவினைப் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே கேட்டுக்கொண்டுள்ளார்.

















