திருத்துறைப்பூண்டி அருகே டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு .
தமிழகத்தில் பேருந்து நிலையம், கோவில் , பள்ளிக்கூடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை தமிழக அரசு மூட உத்தரவிட்ட நிலையில் இதுவரை 500க்கும் மேற்பட்ட கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மாங்குடி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக டாஸ்மாக் கடை அருகே அரசு பள்ளி மற்றும் தேவாலயம் அமைந்துள்ளது இதன் காரணமாக பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வரும் டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த திருத்துறைப்பூண்டி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் . அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
