மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரை தளத்துடன் உள்ள ஏழு அடுக்கு மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. 60க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வரும் ஊழியர்கள் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றியுள்ள வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வர். பின்புறம் அலுவலக வாயில் அருகே சாரை பாம்பு ஒன்று இன்று மதியம் முதல் சுற்றி திரிந்து வந்தது. சாரைப்பாம்பு பல்வேறு வாகனங்களில் ஏறியதை பலர் பார்த்துள்ளனர். இந்நிலையில் பின்புற வாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஊழியர் ஒருவரின் மொபெட் ஒன்றில் பாம்பு புகுந்ததை அங்கு நின்ற ஊழியர்கள் சிலர் பார்த்துள்ளனர். இதையடுத்து, வனத்துறையினருக்கும் சீர்காழியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாண்டியன் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்துக்கு வந்த பாம்புப்பிடி வீரர் பாண்டியன், இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் பாம்பு பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்த பின்னர், 200 மில்லி தண்ணீரில் 10 மில்லி பெட்ரோல் கலந்து பாம்பு பதுங்கியிருந்த இடத்தில் ஊற்றினார். சில நிமிடங்களில் வாகனத்தில் இருந்து வெளியேறிய 3 அடி நீளம் உடைய சாரைப் பாம்பினை பத்திரமாக மீட்டு, பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவித்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
