உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அன்னை மீனாட்சியையும், சொக்கநாதரையும் தரிசித்துத் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதற்காகவும், நேர்த்திக்கடனாகவு் பக்தர்கள் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். அந்த வகையில், தற்போது நடைபெற்று முடிந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், பக்தர்களின் அர்ப்பணிப்பால் கோவிலின் செல்வச் செழிப்பு வியக்கத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 10 உப கோவில்களில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் முறைப்படி திறக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் வைத்து எண்ணப்பட்டன. இந்த உண்டியல் எண்ணும் பணி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் முன்னிலையில், பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த முறை எண்ணப்பட்ட காணிக்கையின் மூலம், ரொக்கப் பணமாக மட்டும் ரூ.13,50,90,076 (பதிமூன்று கோடியே ஐம்பது லட்சத்து தொண்ணூறாயிரத்து எழுபத்தி ஆறு ரூபாய்) கிடைத்துள்ளது. மேலும், 4 கிலோ 615 கிராம் தங்கம் மற்றும் 10 கிலோ 353 கிராம் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கோவில் என்பதால், இந்திய ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி, அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5,047 வெளிநாட்டுச் செலாவணி நோட்டுகளும் உண்டியலில் கிடைத்துள்ளன. இது மீனாட்சி அம்மன் கோவில் மீதான உலகளாவிய பக்தியைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. திரட்டப்பட்ட இந்த நிதியானது கோவிலின் நிதி மேலாண்மை விதிகளின்படி வங்கிகளில் வரவு வைக்கப்பட்டு, கோவிலின் புனரமைப்புப் பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் அன்னதானத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது. கோவிலின் இந்த அபரிமிதமான வளர்ச்சி, ஆன்மீகச் சுற்றுலாவின் முக்கிய மையமாக மதுரை தொடர்ந்து விளங்குவதைச் சுட்டிக்காட்டுகிறது.
















