சென்னை: தமிழ்ப்பெயர்களின் அழகு மற்றும் அவற்றின் அர்த்தங்களை புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில், குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் மற்றும் பொருள்கள் அடங்கிய புதிய இணையதளத்தை தொடங்கவுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற மயிலாப்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வேலுவின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “வேலு தன்னுடைய மகளுக்கு அனுஷா என பெயர் வைத்துள்ளார். அது தமிழ்ப்பெயராக இல்லையெனினும், இனி பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர்கள் சூட்ட வேண்டும்” என வலியுறுத்தினார்.
இந்த உரையைக் கேட்ட நிதின் சிற்றரசு என்ற சமூக வலைதள பயனர், எக்ஸ் தளத்தில் தனது கோரிக்கையை வெளியிட்டு, “தமிழில் குழந்தை பெயர்கள் மற்றும் அதன் பொருள் குறித்த நம்பகமான இணையதளம் கிடைப்பது கடினம். எனவே, தமிழ் வளர்ச்சித்துறையோ, தமிழ் இணையக் கல்விக்கழகமோ இதற்காக தனி வலைத்தளத்தை உருவாக்க வேண்டும்” என்றார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “தம்பி @srinileaks அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும், அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்தார்.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், நவீன தொழில்நுட்பத்தில் அதன் தாக்கத்துக்கும் இது ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.