மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனம் 27வது மடாதிபதியின் 60 ஆம் ஆண்டு பூர்த்தி விழா கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகின்றது. இதன் முக்கிய நிகழ்வாக இரண்டாம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. இவற்றுள் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பள்ளி மாணவ , மாணவிகளின் அறிவியல் கண்காட்சி மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் 350 பேர் பங்கேற்று தங்கள் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். தொடர்ந்து விமான விபத்து ஏற்பட்டால் சென்சார் மூலம் பயணிகள் கேபின் தனியாக தரையரங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அறிவியல் படைப்பு, பிளாஸ்டிக் விழிப்புணர்வு , மழைநீர் சேகரிப்பு, ஸ்டெம் செல் மூலம் உடல் குறைபாடுகளை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் அறிவியல் படைப்புகளை கண்டு ரசித்தனர்.

 
			















