இந்தியாவில் பிறந்து, தற்போது அமெரிக்காவில் வசிக்கும் பிரஞ்சலி அவஸ்தி என்ற இளம் திறமைசாலி, 18 வயதிலேயே தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்தை ரூ.100 கோடி மதிப்புள்ள நிறுவனமாக வளர்த்துள்ளார்.
பிரஞ்சலி, 16 வயதிலேயே Delv.AI எனும் ஏஐ நிறுவனம் தொடங்கினார். இந்த நிறுவனம் PDF மற்றும் பல்வேறு ஆவணங்களில் இருந்து தேவையான தகவல்களை எளிதாக பெறவும், சுருக்கமாக வடிகட்டவும் உதவும் தொழில்நுட்ப தளமாகும். இரண்டு ஆண்டுகளில், நிறுவனம் அபார வளர்ச்சி பெற்று, தற்போது சுமார் ரூ.100 கோடி (12 மில்லியன் டாலர்) மதிப்பை எட்டியுள்ளது.
ஏழாம் வயதிலேயே கோடிங் கற்றுக் கொள்ளத் தொடங்கிய பிரஞ்சலி, 11 வயதில் தந்தையுடன் புளோரிடாவுக்கு குடிபெயர்ந்தார். கணினி பொறியாளரான அவரது தந்தை, அவருடைய ஆர்வத்தை ஊக்குவித்து, தொடர்ந்து வழிகாட்டியாக இருந்தார். 13 வயதில் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து கற்றார் , பின்னர் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஆய்வக பயிற்சிகள் மூலம் திறமையை வளர்த்துக் கொண்டார்.
தற்போது, Dash என்ற புதிய ஏஐ கருவியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மிகக் குறைந்த வயதிலேயே உலகளாவிய அளவில் கவனம் பெற்றிருக்கும் அவர், தொழில்நுட்ப உலகில் இளம் தலைமுறைக்கான ரோல் மாடலாக திகழ்கிறார்.
