திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் என்றாலே வறட்சிக்குப் பெயர்போன பகுதி என்றும், அங்கு கம்பு, சோளம், நிலக்கடலை போன்ற மானாவாரிப் பயிர்களைத் தவிர வேறொன்றும் விளையாது என்ற பிம்பத்தையும் உடைத்தெறிந்துள்ளார் 65 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர் ஏழுமலை. வெரியம்பட்டி அருகே கருவேல முட்கள் அடர்ந்து, ஆடு மாடுகள் மேயும் தரிசு நிலமாகக் கிடந்த தனது 12 ஏக்கர் நிலத்தை, இன்று பலவகை அரிய பழங்கள் விளையும் பசுமைப் பூங்காவாக மாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், பாரம்பரிய விவசாயத்தை விட மாற்றுக் கொள்கையுடன் புதிய முயற்சியில் இறங்கிய ஏழுமலை, தனது நிலத்தைச் சீரமைத்து, பயன்பாடற்றுக் கிடந்த கிணற்றில் போர்வெல் அமைத்து நீர் ஆதாரத்தைப் பெருக்கினார். பொதுவாக விவசாயிகள் பயிரிடும் நெல், சோளம் ஆகியவற்றைத் தவிர்த்து, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குப் பயணித்து அரிய வகை மரக்கன்றுகளைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து தனது தோட்டத்தில் நட்டுள்ளார்.
தற்போது அவரது தோட்டத்தில் நெல்லி, ஸ்டார் புரூட் (Star Fruit), கமலா ஆரஞ்சு, சைனீஸ் ஆரஞ்சு, கொய்யா, வாட்டர் ஆப்பிள், அவகோடா (Avocado) மற்றும் வியட்நாம் சிவப்பு பலா, மலேசியன் தேன் பலா என 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையக்கூடிய 60 வகையான பழ மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. சொட்டுநீர் பாசன முறையைப் பயன்படுத்தி பராமரிக்கப்பட்டு வரும் இந்தத் தோட்டத்தில், குறிப்பாக மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய வாட்டர் ஆப்பிள் மரத்தில் சுமார் 400 கிலோ மகசூல் எடுத்து திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் சந்தைகளில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளார். அசாத்திய துணிச்சலுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியின் மூலம் நெல்லி, தென்னை மற்றும் அவகோடா பழங்களும் தாராளமாக மகசூல் தரத் தொடங்கியுள்ளன. “மலைப்பிரதேசப் பழங்களை நம் சமவெளிப் பகுதிகளில் பயிரிட்டால் என்ன என்ற தேடலே இந்த வெற்றிக்குக் காரணம்” எனக் கூறும் ஆசிரியர் ஏழுமலை, இன்னும் சில ஆண்டுகளில் மகசூலை அதிகப்படுத்தி சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்குப் பழங்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளார். வறண்ட நிலத்தையும் வருமானம் தரும் சோலையாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ள இவரது அசாத்திய திறமையைச் சுற்றுவட்டார விவசாயிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

















