சிங்கப்பூரிலிருந்து 41 நாட்களில் 14,000 கிலோ மீட்டரை கடந்து சாதனை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அரங்ககுடியை சேர்ந்தவர் சிராஜுதீன்(50). இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணியில் உள்ளார். சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற இவர் சாலை பாதுகாப்பை வலியுறுத்தியும் சிங்கப்பூரில் உள்ள ஆட்டிசம் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு நிதி திரட்டும் வகையில் இரு சக்கர வாகனத்தில் இந்தியாவிற்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். இவரது கனவை நிறைவேற்றும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி சாலை பாதுகாப்பை வலியுறுத்தியும், ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் இருசக்கர வாகனத்தில் தன் பயணத்தை துவங்கினார். இவரது சக தோழர் திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியை சேர்ந்த ஜெய்சன் ஆகிய இருவரும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ 450 ரக 2 இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டனர். மலேசியா, தாய்லாந்து, லாவோஸ், சீனா, திபெத், நேபாளம், வழியாக இந்தியா வந்தடைந்தனர். இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தை தவிர பல்வேறு மாநிலங்களில் இருசக்கர வாகனத்தில் 41 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நிதி திரட்டியவர்கள் 14,000 கிலோ மீட்டர் கடந்து வந்து இன்று தங்கள் சொந்த மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தனர். இருசக்கர வாகனத்தில் தனது சொந்த கிராமமான மயிலாடுதுறை அருகே உள்ள அரங்கக்குடி கிராமத்திற்கு வந்த சிராஜுதினுக்கு அவரது குடும்பத்தினர், மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தன் சிறுவயது ஆசையை 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றியுள்ளதாகவும், சுற்றுப்பயணத்தில் 7 லட்சம் ரூபாய் திரட்டிய நிதியை சிங்கப்பூரில் உள்ள ரெயின்போ என்ற நிறுவனத்தின் வாயிலாக ஆட்டிசத்தால் சம்பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Exit mobile version