கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள கிம்ஸ் ஹெல்த் (KIMSHEALTH) மருத்துவமனை, மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ‘இன்சுலினோமா’ (Insulinoma) எனப்படும் அரிய வகை கணையக் கட்டியால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு, அதிநவீன லேப்பரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகச் சிகிச்சை அளித்து அந்த மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இன்சுலினோமா என்பது கணையத்தில் தோன்றும் ஒரு அபூர்வ எண்டோக்ரைன் கட்டியாகும். இது உடலில் அளவுக்கு அதிகமான இன்சுலினைச் சுரக்கச் செய்து, ரத்தச் சர்க்கரை அளவை மிகத் தீவிரமாகக் குறைக்கக்கூடியது (Hypoglycaemia). இதனை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியத் தவறினால், நோயாளி அடிக்கடி மயக்கம் அடைதல், வலிப்பு, நினைவு இழப்பு மற்றும் நிரந்தர நரம்பு மண்டலப் பாதிப்பு போன்ற தீவிரமான சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடும்.
சமீபத்தில் இந்த நோயின் அறிகுறிகளுடன் வந்த இளைஞரைப் பரிசோதித்த கிம்ஸ் ஹெல்த் மருத்துவக் குழுவினர், அவருக்குக் கணையத்தில் கட்டி இருப்பதை உறுதி செய்தனர். பொதுவாக இத்தகைய சிக்கலான கட்டிகளை அகற்றப் பெரிய அளவில் அறுவை சிகிச்சை (Open Surgery) தேவைப்படும். ஆனால், நோயாளியின் நலன் கருதி, மேம்பட்ட குறைந்த காயப்படுத்தும் (Minimally Invasive) நுண்துளை அறுவை சிகிச்சை முறையை மருத்துவர்கள் தேர்ந்தெடுத்தனர். குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரஜீஷ் செல்வகணேசன் தலைமையில், நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலா வித்யாசாகர், மயக்கவியல் நிபுணர் டாக்டர் பாலாஜி மற்றும் உட்சுரப்பியல் நிபுணர் டாக்டர் ஹென்னித் ராஜ் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர், ‘மண்ணீரலைப் பாதுகாக்கும் டிஸ்டல் பான்க்ரியாடெக்டமி’ (Spleen-preserving Distal Pancreatectomy) என்ற உயர் நுணுக்கமான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில், எவ்வித ரத்த இழப்பும் இன்றி கணையக் கட்டி முழுமையாக அகற்றப்பட்டது. இந்தச் சிகிச்சையின் சிறப்பம்சமே, நோயாளியின் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய ஆதாரமான மண்ணீரலைச் சிதைக்காமல் பாதுகாத்ததுதான். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி வியக்கத்தக்க வகையில் விரைவாகக் குணமடைந்து, ஐந்தாம் நாளிலேயே நல்ல உடல் நிலையில் வீடு திரும்பினார். இது போன்ற சிக்கலான மற்றும் அரிய சிகிச்சைகளுக்காகத் தென் மாவட்ட மக்கள் இனி சென்னை, மதுரை போன்ற தொலைதூர மாநகரங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதையும், உலகத்தரம் வாய்ந்த லேப்பரோஸ்கோபிக் வசதிகள் நாகர்கோவிலிலேயே கிடைப்பதையும் இந்த வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ள கிம்ஸ் ஹெல்த் நிர்வாகம், தொடர்ந்து தென் தமிழக மக்களின் மருத்துவத் தேவைகளைத் துல்லியமாகப் பூர்த்தி செய்யும் என உறுதியளித்துள்ளது.
















