திருவாரூர் அருகே DMKஆட்சியில் கொடுக்கப்பட்ட வீட்டு மனை பட்டா செல்லாது எனக்கூறி மறியல் போராட்டத்தில் பரபரப்பு

திருவாரூர் அருகே திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வீட்டு மனை பட்டா செல்லாது எனக்கூறி, இடத்தை கைப்பற்ற வந்த இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்காவிற்க்கு உட்பட்ட திருப்பணிப்பேட்டை அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலப்பகுதி கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட தக்கலூர், திருப்பணிப்பேட்டை, விடயபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ளது. இந்த கோவில் நிலத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.

திமுக காலத்தில் கொடுக்கப்பட்ட வீட்டுமனை பட்டாவின் அடிப்படையிலேயே இப்பகுதி மக்கள் இங்கு வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தக்கலூர், திருப்பணிப்பேட்டை, விடயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 21563 சதுர மீட்டர் பரப்பளவிலான இடத்தை, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ராணி தலைமையிலான அதிகாரிகள் இந்த இடத்தை கைப்பற்றி அறிவிப்பு பலகை வைக்க முயன்றனர்.

அப்போது 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களை அப்பகுதியில் இருந்து அகற்றக் கூடாது எனவும், நிலத்திற்கான வாடகை தொகையை தவணை முறையில் பெற்றுக்கொள்ள வேண்டும், அறிவிப்பு பலகையினை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருவாரூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து இடத்தை கையகப்படுத்தும் பணியில் இந்து சமய அறநிலைத்துறையினர் ஈடுபட்டனர்.

திமுக ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட வீட்டுமனை பட்டாவின் அடிப்படையிலேயே இப்பகுதி மக்கள் வீடுகள் கட்டி வாழ்ந்து வந்த நிலையில், அதே திமுக ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என கூறி கையகப்படுத்துவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.

Exit mobile version