தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை மீண்டும் தமிழக முதலமைச்சர் அரியணையில் அமர்த்தும் வகையிலும், மறைந்த முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாவினைக் கழக அம்மா பேரவை சார்பில் மாநிலம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடுவது குறித்தும் சென்னை தலைமைக்கழகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கியத்துவமிக்கக் கூட்டத்தில், வரும் 2026 தேர்தலுக்கான களப்பணிகள் மற்றும் அம்மா பேரவையின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கழகப் பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் கழகத் துணைப் பொதுச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான முன்னாள் முப்பெருந்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் எம்.எல்.ஏ ஆகியோர், எடப்பாடியாரை முதலமைச்சராக்கத் தொண்டர்கள் இப்போதிலிருந்தே மக்கள் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என எழுச்சியூட்டும் ஆலோசனைகளை வழங்கினர். மேலும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சி.பொன்னையன், கழக மகளிரணி செயலாளர் பி.வளர்மதி, கழக இலக்கிய அணி செயலாளர் முனைவர் வைகைசெல்வன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
அம்மா பேரவையின் இணைச் செயலாளரும், முன்னாள் நத்தம் ஒன்றியப் பெருந்தலைவருமான ஆர்.வி.என்.கண்ணன் அவர்கள் முன்னிலை வகிக்க, மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த அம்மா பேரவையின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் நலப்பணிகள் குறித்துக் கருத்துகளைப் பகிர்ந்தனர். எடப்பாடியாரின் தலைமையின்கீழ் அதிமுகவை மீண்டும் அரியணையில் அமர்த்துவதே தாரக மந்திரமாகக் கொண்டு, அம்மாவின் பிறந்தநாள் விழாவை ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் திருவிழாவாகக் கொண்டாட இக்கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இந்த எழுச்சியான ஆலோசனைக் கூட்டம் அதிமுக தொண்டர்களிடையே 2026 தேர்தலுக்கான புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
