சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) தொடங்கியுள்ள நிலையில், அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது சாதாரண பட்டியல் சீராய்வு அல்ல, குடியுரிமையை பறிப்பதற்கான அரசியல் சதி என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “SIR-ஐ நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து, வரும் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை நகரில், எமது கட்சியின் சார்பில் என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்,” என்று தெரிவித்தார்.
SIR குறித்து அவர் மேலும் கூறியதாவது: “இது பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் ஆணையமும் இணைந்து வடிவமைத்த கூட்டு சதி. எதிர்ப்பு வாக்குகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான உள்ளார்ந்த நோக்கத்துடனே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. SIR என்பது குடியுரிமையை பறிக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) போன்ற திட்டத்துக்கு வழிவகுக்கும் செயல்திட்டம்.” “பழைய SR முறையே தொடர வேண்டும்”
திருமாவளவன் வலியுறுத்தியதாவது:
தேர்தலுக்கு முன் பழைய SR (Summary Revision) முறையே பயன்படுத்தப்பட வேண்டும். SIR என்பது நாடு முழுவதுக்கும் ஒரு அச்சுறுத்தல்; ஜனநாயகத்தைக் குலைக்கும் முயற்சி.
அவர் மேலும், பீகார் தேர்தல் முடிவை எடுத்துக்காட்டி, “அது ஜனநாயகத்தைக் கொன்று புதைக்கும் செயல். மக்களின் நம்பகத்தன்மையை சிதைக்க உருவாக்கப்பட்ட அரசியல் திட்டத்தின் விளைவு,” என கருத்து வெளியிட்டார்.
“குடியுரிமையை பாதிக்கும் மறைமுக முயற்சி”
“SIR-ஐ மேலோட்டமாக பார்த்தால் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு என தோன்றினாலும், அதன் பின்னால் குடியுரிமை நீக்க முயற்சிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மறைமுக திட்டம் உள்ளது. இது நாட்டுக்கு நல்லதல்ல,” என்று அவர் தெரிவித்தார்.
