கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலத்தை முன்னிட்டு, தேனி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்களுக்குக் கேரள மாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கூடலூர் அருகே அமைந்துள்ள ‘அப்பாச்சி பண்ணை’ பகுதி தற்போது ஒரு பிரம்மாண்ட சுற்றுலா மையமாக உருவெடுத்துள்ளதால், அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிமாநிலப் பயணிகள் குவிந்து வருகின்றனர். தேனி மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார ஆதாரமாக விளங்கும் திராட்சைச் சாகுபடியையும், நவீனச் சுற்றுலா அம்சங்களையும் இணைக்கும் ஒரு பாலமாக இப்பகுதி மாறியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கூடலூர் – கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அப்பாச்சி பண்ணையில் உள்ள பரந்து விரிந்த திராட்சைத் தோட்டங்கள், கேரள பயணிகளுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தைத் தருகின்றன. பசுமை மாறாத இந்தத் தோட்டங்களைக் காண்பதற்கும், அங்கேயே விளைவிக்கப்படும் புதிய திராட்சைகளை வாங்குவதற்கும் பயணிகள் காட்டும் ஆர்வம் காரணமாக, கடந்த சில காலங்களாக இப்பகுதியில் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. பயணிகளை மேலும் கவரும் வகையில், திராட்சை விவசாயத்தைப் பாதிக்காத வகையில் ‘ஸ்கை அவஞ்சர்’ (Sky Avenger) உள்ளிட்ட நவீனப் பொழுதுபோக்கு அம்சங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இப்பகுதியின் மிக முக்கியமான வரலாற்றுப் பின்னணியைப் பயணிகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் திருவுருவச் சிலை மற்றும் அணையின் வரலாற்றைத் தத்ரூபமாக விளக்கும் புகைப்படக் காட்சிகள் மற்றும் தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் தற்போது முழுமையடைந்து பயன்பாட்டிற்கு வரத் தயாராக உள்ளன. இது முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதியான இங்கிருந்து அணையின் முக்கியத்துவத்தைச் சுற்றுலாப் பயணிகள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறைத் தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வருவதால், சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமன்றி, குடும்பங்களுடன் வரும் சுற்றுலாப் பயணிகளாலும் அப்பாச்சி பண்ணை விழாக்கோலம் பூண்டுள்ளது. வெறும் விவசாய நிலமாக அறியப்பட்ட இப்பகுதி, தற்போது தேனி மாவட்டத்தின் தவிர்க்க முடியாத ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ ஆக உருமாறியுள்ளது. இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு பெருகியுள்ளதோடு, மாவட்டத்தின் சுற்றுலா வருவாயும் உயரத் தொடங்கியுள்ளது. பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தைச் சீரமைக்கக் கூடுதல் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
