ரூ.21.57 கோடியில் நவீன ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை – முதலமைச்சர் திறந்து வைத்தார்!

திருச்சிராப்பள்ளி மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்), பால் பதப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டத்தின் (DIDF) கீழ், ரூ.21.57 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது. இந்த நவீனத் தொழிற்சாலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். நாளொன்றுக்கு 6,000 லிட்டர் ஐஸ்கிரீம் மற்றும் 10,000 லிட்டர் நொதியூட்டப்பட்ட பால் உபபொருட்களைத் தயாரிக்கும் பிரம்மாண்ட திறன் கொண்ட இந்த ஆலை, ஆவின் நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இந்த புதிய தொழிற்சாலையில் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கப், கோன் மற்றும் கேண்டி போன்ற பல்வேறு சுவையான ஐஸ்கிரீம் வகைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இது தவிர, உடலுக்கு ஆரோக்கியம் தரும் நொதியூட்டப்பட்ட பால் உபபொருட்களான தயிர், மோர் மற்றும் லெஸ்ஸி போன்றவையும் நவீன முறையில் தயாரிக்கப்பட உள்ளன. இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் திருச்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட பொதுமக்களுக்கு உடனுக்குடன் தரமான முறையில் கொண்டு சேர்க்கப்பட உள்ளது. மேலும், திருச்சிக்கு அருகில் உள்ள இதர ஆவின் ஒன்றியங்களின் தேவையையும் ஈடுசெய்யும் வகையில் இத்தொழிற்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளதால், நுகர்வோருக்குத் தட்டுப்பாடின்றி ஆவின் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திருச்சி கொட்டப்பட்டில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), செ.ஸ்டாலின்குமார் (துறையூர்), ந.தியாகராஜன் (முசிறி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் மு.மதிவாணன், பி.ஜெயநிர்மலா, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர் சி.முத்துமாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், பண்ணை பொது மேலாளர் ஆர்.சதீஷ், பால்வளத் துணைப்பதிவாளர்கள் கோ.நாகராஜ் சிவக்குமார் (திருச்சி), ஜெ.விஜயா (பெரம்பலூர்), ஆர்.நாராயணசாமி (அரியலூர்) மற்றும் ஆவின் பணியாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இந்த நவீன ஆலையின் வருகையினால், தனியார் நிறுவனங்களுக்கு இணையான தரத்தில் ஆவின் பொருட்கள் பொதுமக்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version