திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 50 வயது நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு, ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது குறித்துப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திண்டுக்கல் சித்தரேவு பகுதியைச் சேர்ந்த ராமையா (50) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தர திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் அவர்கள் உரிய அறிவுரைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து: ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பேபி, நீதிமன்ற முதல் நிலை காவலர் திருமதி. மாரியம்மாள், அரசு வழக்கறிஞர் திருமதி. ஜோதி ஆகியோர் அடங்கிய குழுவினர் வழக்கைச் சிறப்பாகக் கையாண்டு, போதிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதி, கடந்த 17.12.2025 அன்று இறுதித் தீர்ப்பை வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட ராமையாவிற்கு: 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. ரூ. 10,000/- அபராதம் விதித்து உத்தரவிட்டார்.9 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ள நீதியாகக் கருதப்படுகிறது. காவல்துறையினரின் இந்த அர்ப்பணிப்புடன் கூடிய பணியைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்
















