தேனி மாவட்டம் மேகமலை மலைப்பகுதிகளில் நிலவும் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஹைவேவிஸ், வெண்ணியாறு, மணலாறு, இரவங்கலாறு மற்றும் மகாராஜா மெட்டு போன்ற மலைக் கிராமங்களில் சமீபகாலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 5:00 மணியளவில், குட்டியுடன் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று ஹைவேவிஸ் பகுதியில் கடும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. முதலில் ஹைவேவிஸ் அணையின் பிரதானக் கதவை (கேட்) உடைத்து உள்ளே நுழைய முயன்ற அந்த யானை, கம்பி கேட்டை உடைக்க முடியாமல் போனதால் அருகில் இருந்த போலீஸ் புறக்காவல் நிலையத்தை (அவுட் போஸ்ட்) குறிவைத்தது.
புறக்காவல் நிலையத்தின் கதவு மற்றும் ஜன்னல்களைத் தனது தும்பிக்கையால் தட்டி உடைத்த யானை, ஜன்னல் வழியாகத் தும்பிக்கையை உள்ளே நுழைத்து அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களைத் தேடி எடுத்து வெளியே வீசி எறிந்தது. அந்தச் சமயத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், யானையின் ஆக்ரோஷத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளச் சத்தம் போடாமல் அறையிலிருந்த கட்டிலுக்கு அடியில் பதுங்கிக் கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரமாக அந்த இடத்திலேயே முகாமிட்டிருந்த யானை மற்றும் குட்டியால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, காலை 7:00 மணியளவில் இரவங்கலாறில் இருந்து சின்னமனூருக்குப் பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து ஒன்று அந்தச் சாலை வழியாக வந்தது. சாலையில் யானை மற்றும் அதன் குட்டி நிற்பதை வெகு தொலைவிலேயே கவனித்த பேருந்து ஓட்டுநர், முன்னெச்சரிக்கையாகப் பேருந்தை நிறுத்தினார். அப்போது, அபாயத்தை உணராத சில பயணிகள் பேருந்தை விட்டு இறங்கி, தங்களது செல்போன்களில் யானையைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த யானை, திடீரெனப் பயணிகளை நோக்கிப் பிளிறியபடி ஆக்ரோஷமாக விரட்டியது.
யானை விரட்டுவதைக் கண்டு வீடியோ எடுத்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து யானை தனது குட்டியுடன் மெல்ல வனப்பகுதிக்குள் மறைந்தது. மேகமலைப் பகுதியில் மனித-விலங்கு மோதல் அதிகரித்து வரும் சூழலில், வனவிலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்கவும், புறக்காவல் நிலையத்திற்குப் பாதுகாப்பு வழங்கவும் வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், காட்டு யானைகளைக் கண்டால் பயணிகள் வாகனத்தை விட்டு இறங்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
















