மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக மாவட்ட கமிட்டி கூட்டத்தில் அடிதடி தகராறு

மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக மாவட்ட கமிட்டி கூட்டத்தில் அடிதடி தகராறு , ரத்தக்கறை படிந்த வேட்டியுடன் வெளியேறிய ஒன்றிய செயலாளர், அலுவலகத்தின் முக்கிய வாயில் இழுத்து பூட்டப்பட்டு உள்ளே நடைபெற்ற கூட்டத்தில் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கண்ணார் தெரு பகுதியில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்ட திமுக அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கமிட்டி கூட்டம் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் ஒரு கோஷ்டியும், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இரண்டு கோஷ்டிகளுக்கும் இடையே பலத்த மோதல் நிலவி வரும் நிலையில் இன்று நடைபெற்ற கமிட்டி கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் ஸ்ரீதரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் விக்னேஷ் என்பவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனை நிவேதா முருகன் ஆதரவு பொறுப்பாளர்கள் செல்போனை பறித்தவுடன் ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து கமிட்டி கூட்டம் நடைபெற்ற கட்டிடத்திற்கு வெளியே ரவுடி கும்பல் குவிக்கப்பட்டது. இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவிய நிலையில் முக்கிய பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற அரங்கின் வாயில் கதவு இழுத்து மூடப்பட்ட நிலையில் கூச்சல் குழப்பம் நிலவி வந்தது. மயிலாடுதுறை கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகமணி ரத்தம் தோய்ந்த வேஷ்டியுடன் வெளியேறியது உள்ளே நடந்த பிரச்சனையை வெளிக்கொண்டு வருவதாக இருந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர். ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டும் கூச்சலுடனும் பரபரப்புடன் கமிட்டி கூட்டம் நிறைவடைந்தது

Exit mobile version