ஈரோடு நஞ்சனாபுரத்தில் கல்விச் சேவையில் சிறந்து விளங்கும் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 2025–2026 ஆம் கல்வி ஆண்டிற்கான வருடாந்திர விளையாட்டு விழா, பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட விளையாட்டு மைதானத்தில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தைத் தூண்டவும், அவர்களின் உடல் மற்றும் மன வலிமையை மேம்படுத்தவும் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த விழாவிற்குப் பவானி மின்வாரிய நிர்வாக உதவியாளர் எம்.புலேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவின் தொடக்கமாகத் தேசியக் கொடியைச் சிறப்பு விருந்தினர் ஏற்றி வைக்க, ஒலிம்பிக் கொடியைப் பள்ளியின் தாளாளர் கே.செங்கோட்டுவேலன் மற்றும் பள்ளிக் கொடியைப் பள்ளி முதல்வர் கே.மைதிலி ஆகியோர் ஏற்றி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, பல்வேறு அணிகளாகப் பிரிந்து மிடுக்கான உடையில் மாணவ, மாணவிகள் நிகழ்த்திய அணிவகுப்பு மரியாதையைப் பிரமுகர்கள் ஏற்றுக்கொண்டனர்.
விழாவின் மிக முக்கிய நிகழ்வாக, ஒலிம்பிக் ஜோதியைச் சிறப்பு விருந்தினர் ஏற்றி வைக்க, அதனைத் தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள் கையில் ஏந்தி மைதானத்தைச் சுற்றி ஓடி வந்து பீடத்தில் நிலைநிறுத்தினர். இந்தத் தருணம் மைதானத்தில் குழுமியிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர், விளையாட்டு வீரர்களுக்குரிய பண்புகளுடன் நேர்மையாகப் போட்டிகளில் பங்கேற்போம் என மாணவர்கள் அனைவரும் விளையாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாகச் சமாதானப் புறாக்களைச் சிறப்பு விருந்தினர் வானில் பறக்கவிட்டு, தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். குறிப்பாக, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒருங்கிணைந்து நிகழ்த்திய நடன உடற்பயிற்சி (Aerobics), அவர்களின் ஒருங்கிணைந்த திறமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.
கடந்த ஓராண்டில் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களின் சாதனைகளை உள்ளடக்கிய விளையாட்டு ஆண்டறிக்கையை உடற்கல்வி ஆசிரியர் எஸ்.வடிவேல் வாசித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குச் சிறப்பு விருந்தினர் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்வில் கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்டின் (KVITT) பாரம்பரிய உறுப்பினர் ஜி.ஐ.நம்பி முன்னிலை வகித்துச் சிறப்பித்தார். டிரஸ்ட் தலைவர் சி.தேவராஜன், செயலாளர் ஆர்.ஆர். சத்தியமூர்த்தி, பொருளாளர் ஈ.ஆர்.கார்த்திகேயன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். முன்னதாகப் பள்ளி மாணவர் தலைவர் ஜி.பூபேஷ் வரவேற்புரை நிகழ்த்த, விழாவின் நிறைவாக மாணவர் துணைத்தலைவர் எஸ்.எஸ்.ஹர்ஷா நன்றி கூறினார்.
