வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சக்திவேல் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த திருத்தணியைச் சேர்ந்த ராணுவ வீரர் சக்திவேல் அவர்களின் குடும்பத்திற்கு, திண்டுக்கல் இராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் அறங்காவலர் குடும்பத்தினர் சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த ராணுவ வீரர் சக்திவேல், கடந்த மாதம் காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் வீரப்போர் புரிந்து வீரமரணம் அடைந்தார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோயில், ராணுவ வீரர்களைக் கௌரவிப்பதில் தனித்துவம் மிக்கது. இக்கோயிலுக்கு வரும் முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர்களுக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செய்வது வழக்கமாகும். இதுவரை சுமார் 50,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு இக்கோயில் சார்பில் இத்தகைய கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.வீரமரணம் அடைந்த சக்திவேலின் தியாகத்தைப் போற்றும் வகையில், கட்டசின்னான்பட்டியைச் சேர்ந்த பாதாள செம்பு முருகன் கோயில் அறங்காவலர் சேது பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர் சக்திவேலின் மனைவி தேவஸ்ரீ சக்திவேல் அவர்களின் வங்கிக் கணக்கிலும்,தந்தை கன்னிவேல் அவர்களின் வங்கிக் கணக்கிலும், மொத்தம் 5 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.நிதியுதவி வழங்கியதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாப்பிற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த சக்திவேலின் குடும்பத்திற்குப் பாதாள செம்பு முருகன் கோயில் குடும்பத்தினர் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டனர். இக்கோயில் நிர்வாகத்தின் இந்த மனிதாபிமானச் செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version