ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள அச்சடி பிரம்பு பகுதியில் அமைந்துள்ள ‘ஐந்திணை மரபணு பூங்கா’ நேர்மையின் சங்கமமாக இன்று மாறியுள்ளது. இப்பூங்காவிற்கு வந்த சுற்றுலாப் பயணி ஒருவரது பேத்தி தொலைத்த 2 பவுன் தங்கச் சங்கிலியை, அங்குத் தோட்ட வேலை பார்க்கும் கூலித் தொழிலாளி ஒருவர் கண்டெடுத்து, எவ்வித ஆசையுமின்றி உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் ஐந்து வகை நில அமைப்புகளையும் ஒரே இடத்தில் விளக்கும் இந்தப் பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் மாலை தினைக்குளம் பகுதியைச் சேர்ந்த பெயிண்ட் கடை உரிமையாளர் செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் பொழுதுபோக்குவதற்காக இப்பூங்காவிற்கு வந்துள்ளார்.
பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, செல்வராஜின் பேத்தி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலி டாலருடன் கழன்று விழுந்துள்ளது. சங்கிலி தொலைந்ததை அறியாத செல்வராஜ் குடும்பத்தினர் வீடு திரும்பினர். இரவு நேரத்தில் நகையைக் காணவில்லை என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த அவர்கள், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக, நேற்று முன்தினம் சென்ற ஐந்திணை பூங்காப் பகுதிக்கு வந்து பதற்றத்துடன் தேடிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்குத் தோட்டக் கூலி வேலை பார்க்கும் பால்கரையைச் சேர்ந்த செல்லம்மாள் (55) என்பவர், தாம் வேலை செய்யும்போது தரையில் கிடந்த அந்தத் தங்கச் சங்கிலியைக் கண்டெடுத்துப் பத்திரமாக வைத்திருந்து, செல்வராஜிடம் ஒப்படைத்தார்.
தன்னுடைய வறுமை நிலையிலும், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாமல் நேர்மையாகச் செயல்பட்ட செல்லம்மாளின் செயலைக் கண்டு செல்வராஜ் குடும்பத்தினர் நெகிழ்ந்துபோய் அவருக்குத் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். இந்தச் செய்தி தோட்டக்கலைத் துறையினருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் ஆறுமுகம், உதவி தோட்டக்கலை இயக்குனர் புனித சுகன்யா மற்றும் தோட்டக்கலை அலுவலர் பிரசாந்த் ஆகியோர் செல்லம்மாளை நேரில் அழைத்து அவரது நேர்மையைப் பாராட்டிச் சிறப்பித்தனர். இன்றைய காலக்கட்டத்தில் இத்தகைய நேர்மைப் பண்பு அரிதாகி வரும் நிலையில், கூலித் தொழிலாளியின் இந்தச் செயல் ஒட்டுமொத்தப் பூங்கா ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.

















