மதுரை : ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற கனவு கையில் குத்தியிருந்த பச்சையால் தகர்ந்து போனதால், மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தத்தனேரி அருள்தாஸ் புரத்தைச் சேர்ந்த பாலமுருகனின் மகன் யோகசுதீஷ், தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சிறுவயது முதலே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையுடன் வாழ்ந்த அவர், தினசரி உடற்பயிற்சிகள் செய்து தன்னைத் தயார்படுத்தி வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் யோகசுதீஷ் கலந்து கொண்டார். அப்போது அவரது கையில் பச்சைக் குத்தியிருப்பதை கவனித்த ராணுவ அதிகாரிகள், விதிமுறைகளின்படி அவரை தேர்வில் இருந்து நிராகரித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திடீர் சம்பவத்தால் பெற்றோர் உட்பட உறவினர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை
இளைஞர்கள் பலர் ஆர்வத்திற்காகவும் ஸ்டைலாக இருக்கும் என நினைத்தும் பச்சைக் குத்திக் கொள்வது அதிகரித்து வருகிறது. ஆனால், இது எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளிலும், குறிப்பாக ராணுவம் போன்ற அரசு துறைகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், முறையற்ற இடங்களில் பச்சைக் குத்திக்கொள்வது உடல்நலத்துக்கும் ஆபத்தாக முடியும் என்பதால், இளைஞர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.