தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தின் விஐபி தொகுதியான ஸ்ரீரங்கத்தில் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளியை வேட்பாளராகக் களமிறக்க அதிமுக – பாஜக கூட்டணி தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரும் வாக்கு வங்கியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் முத்தரையர் சமூக மக்களின் ஆதரவைப் பெறப் பல்வேறு கட்சிகள் மல்லுக்கட்டி வருகின்றன. இந்தச் சூழலில், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கத்தின் நிறுவனரான ஆர்.வி. (ஆர்.விஸ்வநாதன்) அவர்களின் மகனும், சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரைப்பட நடிகர் ஆர்.வி. பரதனை ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வைக்கக் கூட்டணிக் கட்சிகள் விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முத்தரையர் சமூக அமைப்புகளிடையே பிளவு நிலவும் தற்போதைய சூழலில், அம்பலத்தரசு தலைமையிலான தமிழ்நாடு முத்தரையர் சங்கம் இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அதேசமயம் கே.கே. செல்வகுமார் தலைமையிலான வீர முத்தரையர் முன்னேற்றச் சங்கம் திமுகவிற்கு ஆதரவளித்து வருகிறது. இதற்குப் போட்டியாக, ஆர்.வி. தலைமையிலான அமைப்பு அதிமுக – பாஜக கூட்டணிக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ஆர்.வி-க்கு மேடையில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டதன் மூலம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இவர்களுக்குப் பலமான இடம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆர்.வி. பரதன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறுகையில், “எங்களது கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட 3 தொகுதிகள் கேட்கத் திட்டமிட்டுள்ளோம்; குறைந்தது 2 தொகுதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு அமையும் பட்சத்தில் புதுக்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிகளில் போட்டியிடுவோம். குறிப்பாக ஸ்ரீரங்கம் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என அதிமுக மற்றும் பாஜக தலைமை விரும்புகிறது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்தார். ஏற்கனவே 2011 தேர்தலில் 17 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய அனுபவம் கொண்ட ஆர்.வி. பரதன், ஸ்ரீரங்கத்தில் களம் இறங்குவது உறுதி செய்யப்பட்டால், அத்தொகுதியில் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
