ஒடிசா :
நாட்டில் விண்வெளியையும் வென்றெடுத்து வரும் இக்காலத்திலும், சாதி மற்றும் பழமைவாத பிம்பங்களால் நசுங்கும் சமூக சித்தாந்தங்கள் இன்னும் ஒடிசா மாநிலத்தில் அட்டூழியங்களுக்கு வழிவகுக்கின்றன. காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடியை கலப்பையில் பூட்டி, வயலில் உழ வைத்த கொடூர சம்பவம் ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்த கஞ்சமாஜிரா கிராமத்தில் நடந்துள்ளது.
இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அந்த இளைஞன், பெண்ணின் தந்தை வழி அத்தையின் மகன் என்பதால், கிராமத்தின் பழக்கவழக்கங்களை மீறிய திருமணமாக இது கருதப்பட்டுள்ளது. இதனை ஏற்க மறுத்த சில கிராமவாசிகள், காதல் திருமணத்தைத் தண்டிக்க வேண்டும் என தீர்மானித்தனர்.
அதன் விளைவாக, அந்த இளம் தம்பதியை காளைகளைப் போல கலப்பையில் கட்டி, வயலில் உழைக்க வைத்து அவமானப்படுத்தினர். இதையடுத்து, பிரம்பால் தாக்கியதும், ஒரு கோவிலுக்கு அழைத்து சென்று “பாவ பரிகார பூஜை” செய்ததும்கூட தகவலாக வந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் தாங்களே கிராமத்திற்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவத்துக்கான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இப்படியான சிந்தனைகள் சமூகத்தில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்றும், பழமைவாதம் மற்றும் சாதிவாதத்துக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம், சமுதாய முன்னேற்றத்தில் இன்னும் எவ்வளவு தொலைவிற்கு பயணிக்க வேண்டியுள்ளது என்பதை நினைவூட்டும் விதமாக இருக்கிறது.