தஞ்சையில் சிங்கப்பூர் தொழிலதிபரின் ரூ.800 கோடி சொத்துகளை அபகரித்த அதிமுக நிர்வாகி உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு!

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த மறைந்த சிங்கப்பூர் தொழிலதிபர் ஷேக் சிராஜூதீனுக்குச் சொந்தமான சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை, போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து அபகரித்ததாக அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 12 பேர் மீது தஞ்சை மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உறவினர்கள் மற்றும் கணவரின் நண்பர்கள் போல் நடித்து, 76 வயது மூதாட்டியை ஏமாற்றி அரங்கேற்றப்பட்டுள்ள இந்த மெகா மோசடி சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாஞ்சிக்கோட்டை, சீராஜ்பூர் நகர் மற்றும் செங்கிப்பட்டி ஆகிய பகுதிகளில் ஷேக் சிராஜூதீனுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. 2015-ஆம் ஆண்டு சிராஜூதீன் காலமான பிறகு, அவரது மனைவி முகமதா பேகம் (76) இந்தச் சொத்துகளைக் கவனித்து வந்தார். அப்போது, தஞ்சையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா சுமதி என்பவர் மூதாட்டியிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, சொத்துகளைப் பாதுகாத்துத் தருவதாக நம்பிக்கை ஊட்டியுள்ளார். இதனை நம்பி அவரிடம் நிர்வாகப் பொறுப்புகளை ஒப்படைத்ததே இந்த மோசடிக்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

ஸ்ரீவித்யா சுமதி தனக்கு நெருக்கமான தஞ்சை மத்திய மாவட்ட அதிமுக அம்மா பேரவை தலைவரான கேபிள் செந்தில் (எ) செந்தில்குமார் என்பவருடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியுள்ளார். 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், மூதாட்டிக்குத் தெரியாமல் போலியான ‘பவர் ஆப் அட்டார்னி’ (Power of Attorney) மற்றும் விற்பனைப் பத்திரங்களைத் தயாரித்து, வயது மூப்பு காரணமாகச் சரியாகப் பார்க்க முடியாத முகமதா பேகத்திடம் ஏமாற்றிக் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதன் மூலம் செங்கிப்பட்டி மற்றும் சிராஜ்பூர் பகுதிகளில் இருந்த பெட்ரோல் பங்க் இடங்களைச் செந்தில்குமார் தனது உறவினர்களான ரேவதி, மணிகண்டன், ஆதித்யா உள்ளிட்ட 5 பேருக்கு முறைகேடாக விற்பனை செய்துள்ளார்.

மேலும், சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் நாஞ்சிக்கோட்டையில் இருந்த விலை உயர்ந்த இடங்களை, மூதாட்டி தங்களுக்கு ‘அன்பளிப்பாக’ (Settlement/Gift Deed) வழங்கிவிட்டதாகப் போலி ஆவணங்களைக் கட்டமைத்து அபகரித்துள்ளனர். மோசடி கும்பல் இதோடு நிற்காமல், மூதாட்டியின் பெயரிலேயே மூன்று வெவ்வேறு வங்கிகளில் ரகசியமாகக் கணக்குகளைத் தொடங்கி சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளிலும் ஈடுபட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, சிராஜூதீனின் வீட்டை உடைத்து அங்கிருந்த முக்கிய ஆவணங்கள், நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள், நகை மற்றும் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து முகமதா பேகம் தட்டிக் கேட்டபோது, கும்பலைச் சேர்ந்தவர்கள் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். நீண்ட நாட்களாக உயிருக்கு அஞ்சி அமைதி காத்த மூதாட்டி, தற்போது தனது குடும்பத்தினரின் ஆதரவுடன் தஞ்சை மாவட்டக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற போலீசார், அதிமுக நிர்வாகி கேபிள் செந்தில், ஸ்ரீவித்யா சுமதி, பிரகாஷ், ரேவதி உள்ளிட்ட 12 பேர் மீது மோசடி, போலி ஆவணங்களைத் தயாரித்தல், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version