ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ருக்குமணி. இவர் தனது மகன் ரவிக்குமாருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அவர் வீட்டில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அவரது மகன் ரவிக்குமார் போலீசாரை கண்டு தப்பிச் செல்ல முயன்றார். அவரை விரட்டி பிடித்த போலீசார், கடுமையாக விசாரித்தனர்.
அதில் வெளிப்பட்ட அதிர்ச்சிகரமான தகவலின்படி, ஒரு ஏக்கர் நிலத்தில் பங்கை கேட்டு தாயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருப்பதாகவும், அதில் சினங்கொண்டு நேற்று மதுபோதையில் வீட்டுக்கு வந்து, தூங்கிக் கொண்டிருந்த தாயை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளதாகவும் ரவிக்குமார் கூறியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், தாயின் இரு கைகளையும் முறித்து சித்திரவதை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு, போதைமயக்கத்தில் ரவிக்குமார் தாயின் சடலத்துக்கு அருகே படுத்து தூங்கியுள்ளார்.
மறுநாள் காலை மீண்டும் வீடு திரும்பியபோது, போலீசார் அவரை கைது செய்தனர். ருக்குமணியின் உடலில் 60க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து, ரவிக்குமாருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்