பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவாக உள்ள அன்மோல் ககன் மான், தன்னுடைய எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்ததையடுத்து, தற்போது அந்த முடிவை மீண்டும் வாபஸ் பெற்றுள்ளார்.
மான்சா மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல பஞ்சாபி பாடகியும், கரார் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினருமான அன்மோல் ககன் மான், கடந்த 2021-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, சுற்றுலா, கலாசாரம், முதலீட்டு மேம்பாடு மற்றும் தொழிலாளர் நலன்கள் உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சர் பொறுப்பேற்றார்.
ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் அவர் நீக்கப்பட்டார். பின்னர், அரசியலில் இருந்து விலகுவதாகவும், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் அவர் சமூக ஊடகங்களில் அறிவித்திருந்தார்.
தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் ஏற்கனவே சமர்ப்பித்திருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கட்சி தலைவர்கள் அவரை தீவிரமாக தொடர்புகொண்டு, தனது முடிவை மீண்டும் பரிசீலிக்கக் கேட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆம் ஆத்மி மாநில தலைவர் அமன் அரோராவுடன் சந்தித்து ஆலோசனை நடத்திய அன்மோல் ககன் மான், தன்னுடைய ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன். என் தொகுதி மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தனது பதவி விலகல் கடிதத்தைத் திரும்பப் பெறுவதாகவும், அது தொடர்பான அறிவிப்பையும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.