கூடலூர் அருகே தேவாலா ரவுஸ்டன் முல்லை எஸ்டேட் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த மொட்டைவால் காட்டு யானையை வனத்துறையினர் நீண்ட நேரமாக போராடி அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்…..
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களில் பலா மரங்களில் பழங்கள் காய்த்து உள்ளதால் அதனை ருசி பார்க்க காட்டு யானைகள் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களின் அருகே உலா வருவது அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் தேவாலா ரவுஸ்டன் முல்லை எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே உலா வரும் மொட்டை வால் காட்டு யானை குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தி வருகிறது.
அதே போல் நேற்றிரவு குடியிருப்பு பகுதியில் காட்டு யானை உலா வந்ததால் இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இரவு நீண்ட நேரமாக போராடி காட்டு யானையை அடர்ந்தவனப் பகுதிக்கு விரட்டினர்.
இதனிடையே நாள்தோறும் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் இந்த ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
