மயிலாடுதுறையில் பேரன் பேத்திகள் கொள்ளுப்பேத்தி எள்ளு பேரன் உள்ளிட்ட 56 பேரை கண்ட 100 வயதை கடந்த மூதாட்டி இறப்பு. குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து இறுதிச் சடங்கு செய்து உடலை தகனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த ராமையா மனைவி பாஞ்சாலி. 100 வயதை கடந்த பாஞ்சாலிக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். 32 வருடங்களுக்கு முன் கணவர் இறந்த நிலையில் சிற்பக்கூடம் நடத்தும் சிற்பியான இளைய மகன் ராஜா பாதுகாப்பில் வாழ்ந்து வந்தார். பாஞ்சாலிக்கு பேரன், பேத்திகள், கொள்ளுப்பேத்தி, எள்ளு பேரன் வரை 56 பேர் உள்ளனர். இந்நிலையில் உடல் நல குறைவு ஏற்பட்டு 2 மாதங்களாக படுத்த படுக்கையில் இருந்த பாஞ்சாலி இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்கு மகன் ராஜா வீட்டில் நடைபெற்றது. 100 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த பாஞ்சாலியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். குடும்பத்தினர், உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்து பாஞ்சாலி உடலை தகனம் செய்தனர்.

















