2025ம் ஆண்டு ஆடவர் செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த தகவல் இந்தியாவில் உள்ள செஸ் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை போட்டியில், மொத்தம் 206 வீரர்கள் நாக் அவுட் முறையில் ஒருவருக்கொருவர் போட்டியிடவுள்ளனர். போட்டி நடைபெறும் நகரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிடே தலைமை நிர்வாக அதிகாரி எமில் சுடோவ்ஸ்கி கூறியதாவது :
“செஸ் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் மற்றும் ஆதரவு கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 2025ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்த இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.”
தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான செஸ் உலகக் கோப்பையில் இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா, ஹம்பி உள்ளிட்டோர் சிறப்பாகப் பங்கேற்று வருகின்றனர். மொத்தம் 46 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் இந்த தொடரில் கலந்துகொண்டு வருகின்றனர்.
முன்னதாக, 2022ம் ஆண்டு சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 150 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்வும் இந்தியாவில் செஸ் விளையாட்டின் பிரபலத்தை அதிகரிக்க முக்கிய பங்கு வகித்தது.