கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி கடந்த சனிக்கிழமையன்று வட மாநில இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தச் சிறுமி கடந்த ஏழு நாட்களாக சென்னை ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் வட மாநில நபரை தேடி வருகின்றனர். இந்நிலையில் குற்றவாளியை பிடிக்க ஐ.ஜி. அஸ்ராக் கார்க் மேற்பார்வையில் சிறப்புக் குழு ஒன்றை அமைத்து தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினரும் அமைப்புகளும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். சிறுமியின் உறவினர்களுடன் பா.ம.க. மற்றும் த.வெ.க. கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நியாயம் கேட்டு ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அப்போது இன்னும் இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்குமாறு காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள் காவல் நிலையதத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.