ஷார்ஜா : ஐக்கிய அரபு அமீரகத்தில் தன்னுடைய 1 வயது குழந்தையுடன் கேரளா பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மலையாளத்தில் எழுதப்பட்ட 6 பக்க தற்கொலைக் கடிதமும் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த விபன்சிகா மணியன் (32) என்பவர், 2020ஆம் ஆண்டு நிதீஷ் மோகனுடன் திருமணமாகி, கணவருடன் சேர்ந்து ஷார்ஜாவிற்கு குடிபோயிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடுகள் காரணமாக நிதீஷை விட்டு பிரிந்து, ஷார்ஜாவின் அல் நாடா பகுதியில் தனியாக தன் 1 வயது மகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 8ஆம் தேதி விபன்சிகா தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், குழந்தை உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் தங்கி இருந்த பணிப்பெண் கதவுத் திறக்கவில்லை என்பதால், விபன்சிகாவின் கணவருக்கு தகவல் அளிக்கப்பட்டு, கதவை திறந்தபோது அதிர்ச்சிகரமான விபரம் வெளியாகியுள்ளது.
விபன்சிகாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் தற்கொலைக்குப் பிறகு 6 பக்கங்கள் கொண்ட கடிதம் பகிரப்பட்டுள்ளது. அதில், தனது கணவர் நிதீஷ் மோகன், அவரது தந்தை மோகனன் மற்றும் சகோதரி நீது பெனி ஆகியோர், வரதட்சணை கேட்டு தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்தியதாக விபன்சிகா குறிப்பிட்டுள்ளார்.
தனது நிறம் குறைவாக இருப்பதையும், அதனால் “அழகு இல்லை” என விமர்சித்த தனது கணவர், அவருடைய முடியை வெட்டி, மொட்டை அடித்ததாகவும், பல பெண்களுடன் கணவருக்கு தொடர்புகள் இருந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இவற்றின் விளைவாக, விபன்சிகா தனது குழந்தையுடன் தனியாக வாழ்ந்துள்ளார். மேலுமாக, குழந்தையைப் பற்றிய தடய அறிவியல் ஆய்வில், சுவாசம் தடைபட்டு குழந்தை இறந்திருக்கலாம் என்றும், தலையணை மூலம் அழுத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. விபன்சிகா தற்கொலைக்கு முன்பே குழந்தையை கொன்றிருக்கலாம் எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, விபன்சிகாவின் பெற்றோர் கொல்லம் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதில், வரதட்சணை வன்முறை மற்றும் குடும்பத்தினரின் தூண்டுதலால் தங்களின் மகள் உயிரை மாய்த்துக்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
கேரள போலீசார் IPC பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நிதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.