திருப்பத்தூர் : ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணை பாலியல் தொந்தரவு செய்து, பின்னர் கீழே தள்ளிய கொடூர செயலை செய்த ஹேமந்த் ராஜுக்கு, திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் ‘சாகும்வரை சிறை’ என்ற கடும் தண்டனையை விதித்துள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த 4 மாத கர்ப்பவதி, திருப்பூரில் உள்ள ஒரு துணி ஆலை நிறுவனத்தில் தினக்கூலி பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த பிப்ரவரி 6ம் தேதி, மருத்துவ பரிசோதனைக்காக சித்தூருக்கு செல்ல தனது கணவரால் ரயிலில் அனுப்பப்பட்டார். கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலின் பொதுப் பெட்டியில் அவர் பயணம் செய்தார்.
பிப்ரவரி 7ம் தேதி நள்ளிரவு 12.10 மணியளவில், ரயில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் கே.வி. குப்பம் இடமாக செல்லும் போது, கழிப்பறையை பயன்படுத்தப் போன அவரை, அருகே அமர்ந்திருந்த ஹேமந்த் ராஜ் என்பவர் பாலியல் தொந்தரவு செய்து, பின்னர் ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளினார். இதையடுத்து, அவர் கை, கால் முறிந்து படுகாயமடைந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே நேரத்தில், அவரது கர்ப்பத்தில் இருந்த 4 மாத சிசுவும் உயிரிழந்தது.
இச்சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ஹேமந்த் ராஜ் மீது பாலியல் வன்கொடுமை முயற்சி, கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை நிறைவில், நீதிபதி மீனாகுமாரி கடந்த 11ம் தேதி அவரை குற்றவாளி என அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், நீதிபதி கூறியதாவது :
“ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை செய்ய முற்பட்ட ஹேமந்த் ராஜ் மீது சாகும் வரை சிறைதண்டனை மற்றும் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதில், ரூ.50 லட்சம் ரயில்வே அமைச்சகம் சார்பாகவும், மீதமுள்ள ரூ.50 லட்சம் தமிழக அரசால் வழங்கப்பட வேண்டும்” என தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பு, ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் நிலையில், நீதியின் ஒலியாக அமைந்திருக்கிறது.