திருச்சி : “மீண்டும் அங்கீகாரம் பெற வேண்டும் என்பது தொண்டர்களின் ஆசை” என ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர், “அங்கீகாரம் பெற 8 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு குறைந்தபட்சம் 10 முதல் 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். இது எங்களது தொண்டர்களின் விருப்பம் மற்றும் கட்சியின் அடிப்படை உரிமை” என்று கூறினார்.
மேலும், “எந்தவொரு கூட்டணியிலும் இயங்கும் அனைத்து கட்சிகளும் கூடுதல் இடங்களை கேட்கிறார்கள். அதே போல், நாமும் ஆசைப்பட்டு இடங்கள் கேட்பதில் தவறில்லை. ஆனால், 12 சீட்டுகள் எங்கேயும் நாங்கள் கேட்டதில்லை. நீங்கள் கேட்கும்போது தான் எங்களுக்கும் ஆசை இருக்கிறது என்று சொல்கிறேன்” எனவும் விளக்கினார்.
“இது கடைசி முடிவல்ல. எவ்வளவு இடங்களில் நாங்கள் போட்டியிட வேண்டும் என்பது பற்றி கட்சி தலைவர் வைகோ தான் முடிவு செய்ய வேண்டியவர். அதற்கேற்ப கூட்டணி தலைமை ஒப்புதல் அளிக்க வேண்டும். தற்போதைய நிலையை வெளிப்படையாகவே கூறியுள்ளேன்” என்றும் துரை வைகோ தெரிவித்தார்.