பீகார் மாநிலத்தில் அனைத்து துறை அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பீகார் மாநில சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு பிஜேபி ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தள தலைர் நிதிஷ் குமார் முதலமைச்சராக உள்ளார். காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதரவுடன் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ் குமார், பின்னர், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து முதல்வராக உள்ளார்.
இந்தாண்டு இறுதியில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலிலும் பிஜேபி கூட்டணியிலேயே நீடிப்பார் என்று தெரிகிறது. பீகார் சட்டசபைத் தேர்தல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், சட்டசபைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு நிதிஷ் குமார், பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 35 சதவீத இடஒதுக்கீடு என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற பீகார் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. மாநிலத்தில் அதிகளவிலான பெண்கள் பணியிடத்தில் நுழைந்து ஆட்சி, நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதிஷ்குமார் கூறினார்.

















