ஒடிசா மாநிலம் போலங்கிர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட 3 சிறுவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் புருணபாணி ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள தலுபலி பகுதியில் நடந்தது.
சம்பவத்துக்குரிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் ரயில் தண்டவாளத்தில் படுத்திருப்பதும், மற்ற இருவரும் அதை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டதும் பதிவாகியுள்ளது. அதிவேக ரயில் ஒன்று அவருக்கருகாக பறந்துபோன பின்னர், மூவரும் எழுந்து ஆரவாரம் செய்த காட்சிகளும் அதில் காணப்படுகிறது.
இந்த வீடியோவை பார்த்த பல சமூக ஊடக பயனர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் புருணபாணி அருகே வசிக்கும் சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டு, அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் தெரிவித்ததில், “தண்டவாளத்தில் படுத்திருந்த சிறுவன், ரயில் கடந்து செல்லும் போது தன்னால் உயிர் வாழ முடியும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். சமூக ஊடகங்களில் பிரபலமாவதற்காகவே இந்த செயலை செய்ததாகவும் மூவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.”
இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே சட்டத்தின் பிரிவு 153 (அமைதிக்குப் பீதியை ஏற்படுத்தும் செயல்), 145(b) (பொது இடத்தில் தவறான நடத்தை) மற்றும் 147 (தண்டவாளத்திற்குள் சட்டவிரோத நுழைவு) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறார் நீதிமன்ற சட்டத்தின் கீழ் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.