சென்னை :
2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முழுமையாக திட்டமிடத் தொடங்கி விட்டது. இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. விஜய் வருகையின்போது தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கொள்கைப் பாடல்கள் ஒலிக்கப்பட்டன. பின் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முக்கிய சிறப்பாக, விஜய் நேரடியாக இரண்டு முக்கிய தீர்மானங்களை வாசித்தார்.
விஜய்யின் ஐந்து அஸ்திரங்கள் :
- வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் :
கடந்த ஏப்ரல் மாதம் கோவையில் தொடங்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை, ஜூலை மாதத்திற்குள் அனைத்து மண்டலங்களிலும் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. - கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் :
ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 120 மாவட்டங்களில் உள்ள 12,500 கிளைகளில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். - உறுப்பினர் சேர்க்கை முகாம் :
2 கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைக்கும் நோக்குடன் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. - மாநில மாநாடு :
கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற கொள்கை விளக்க மாநாட்டைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது மாநில மாநாடு பிரமாண்டமாக நடத்தப்படும். - விஜய்யின் மக்களுடன் நேரடி சந்திப்பு :
செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்திக்கும் திட்டம் தயாராகியுள்ளது.
முக்கிய தீர்மானங்கள் :
பரந்தூர் விவசாயிகள் உட்பட பொதுமக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடும் என்ற உறுதி.
பாஜக உள்ளிட்ட கொள்கை எதிர்ப்பு மற்றும் பிளவுபடுத்தும் சக்திகளுடன் எந்தவித கூட்டணியும் இல்லை என்பதும் தெளிவாக கூறப்பட்டது.
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜய்யைத் தலைமுறையாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
எதிர்கால கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளுக்கும் விஜய்க்கே முழுப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
















