நகை மாயமான புகாரில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஜித் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதுபோன்று, அஜித் குமாரின் தாயாரிடம் ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையையும் வழங்கியுள்ளார்.
“நீதி விசாரணை உண்மையாகவே நடக்க வேண்டும். அதற்கு நாங்கள் துணையாக இருப்போம்” என்று விஜய் உறுதியளித்ததாக அஜித் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
விஜயின் வருகையைப் பற்றி பின்னர் பேசிய அஜித் குமாரின் தாயார், “ஸ்டாலின், எடப்பாடி போன்று விஜய் போன்ல பேசுவார்னு தான் நினைச்சோம். ஆனா அவர் நேர்ல வந்துட்டாரு. இதை நாங்க எதிர்பாக்கவே இல்ல” என்று கண்களில் நின்ற கண்ணீருடன் தெரிவித்தார்.
விஜயின் வருகை குறித்து முன்னதாக எந்த தகவலும் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டது. ஆரவாரமின்றி, கட்சியின் எந்த உறுப்பினர்களும் இல்லாத சூழலில், எளிமையாக விஜய் வந்தும், குடும்பத்தினரிடம் நேரில் ஆறுதல் கூறியும் சென்றதானது முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான தகவல் பிறகு பகுதியிலேயே பரவியது. இதனால், சுற்றுவட்டார மக்கள் அஜித் வீட்டுக்கு வரத் தொடங்கிய நிலையில், 5 நிமிடங்களில் விஜய் வீட்டிலிருந்து வெளியேறியதாக தெரிகிறது.
இந்த வருகை, ஒரு நடிகராகவும், தலைவராகவும் விஜய் பொதுமக்களின் வேதனையை நேரில் சென்று உணர விரும்புகிறார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.