கானா, பிரேசில் உள்ளிட்ட 5 நாடுகள் பயணத்தின் முதற்கட்டமாக பிரதமர் மோடி, கானா சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில், கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு 8 நாள்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை புறப்பட்டுச் சென்றார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், பிரதமர் மோடி, மிக அதிக நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டு கண்டங்களில் அடங்கிய கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு அவர் செல்லவிருக்கிறார். தமது பயணத்தின் முதல்கட்டமாக இன்று பிற்பகலில் கானா சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2 நாட்கள் கானாவில் தங்கியிருக்கும் அவர் அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்வுள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் கானா சென்றுள்ள முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
தொடர்ந்து, டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டுக்கு செல்லும் பிரதமர், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
இதையடுத்து, அர்ஜென்டினா பயணத்தை முடித்து பிரேசில் செல்லும் பிரதமர், அங்கு பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இறுதியாக பிரேசிலில் இருந்து நமீபியாவுக்கு செல்லும் பிரதமர், அந்நாட்டு அதிபர் நந்தி தைத்வாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.