புதுடெல்லி :
நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா உள்ளிட்டோர் நடித்த தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆனால், கர்நாடகாவில் மட்டும் இந்தப் படம் திரையிடப்படவில்லை. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மே 30ம் தேதி சென்னை ஆடியோ வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் “தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது” என கூறியதைத் தொடர்ந்து, கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. அதன் பின்னர், கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை, மாநிலத்தில் இந்தப் படத்தை திரையிடக்கூடாது என முடிவு செய்தது.
சில கன்னட அமைப்புகள், படம் திரையிடப்பட்டால் திரையரங்குகளுக்கு தீ வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தன. இதனால், திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை.
இந்நிலையில், மகேஷ் ரெட்டி என்ற நபர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதி பி.கே. மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, “திரையரங்குகளில் தீ வைக்கப்படும் என்ற பயத்தின் அடிப்படையில் கர்நாடகா அரசு தலைவணங்கியுள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், “மொழி சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை தூண்டும் நோக்கத்துடன் இந்த பிரச்னை உருவாக்கப்பட்டுள்ளது” எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து, கர்நாடகா அரசிடம் பதில் கேட்ட உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.