மயிலாடுதுறையில் முருகன் சிலையை பயன்படுத்துவது தொடர்பாக தர்மபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக, 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த துலா உற்சவத்தின் முக்கிய விழாக்கள் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் சாலை மறியல், ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமான விழா நடத்துவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை, மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கைது :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது, ஆலயத்தில் உள்ளே தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை சுப்பிரமணிய சுவாமி ஆலயம் உள்ளது. மயூரநாதர் ஆலயத்தில் பழமை வாய்ந்த பஞ்சலோக சிலை சுவாமி உற்சவத்தின் போது பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த சிலை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது என 1974 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆதீனங்களின் முக்கிய விழாக்களில் இரு தரப்பும் விழாக்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவுள்ளது. இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் கந்த சஷ்டி விழா நேற்று முன் தினம் துவங்கிய நிலையில், மயிலாடுதுறையில் பாரம்பரியமான துலா உற்சவம் நடைபெற்று வருகிறது, துலா உற்சவத்தின் ஒரு பகுதியாக தினமும் சுவாமி அம்பாள் முருகன் விநாயகர் சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தெய்வங்கள் எழுந்தருளி வீதி உலா செல்வது வழக்கம். சுப்பிரமணியசாமி ஆலயத்திற்கு முருகன் சிலையை தர முடியாது என மயூரநாதர் ஆலயத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் இரண்டு தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது, காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சமாதானப்படுத்தி சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் வீதி உலாவை நடத்தி வைத்தனர். இந்த வீதி உலா முடிந்து மயூரநாதர் ஆலயத்திற்கு முருகன் சிலையை தருமபுரம் ஆதீனம் ஒப்படைக்கவில்லை என தெரிவித்துள்ள மயூரநாதர் கோயில் நிர்வாகம் கடந்த இரண்டு தினங்களாக சுவாமி புறப்பாடல் நடத்தவில்லை மற்றும் நேற்று இரவு நடைபெற இருந்த புகழ் பெற்ற ஓலை சப்பரம் எனப்படும் சகோபுர வீதி உலாவும் நடைபெறவில்லை, இந்நிலையில் ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமிக்க துலாம் உற்சவத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாததை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, இந்து முன்னணி மற்றும் சிவனடியார்கள் கூட்டம் சார்பில் மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அரசு உடனடியாக தலையிட்டு விழாவை நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை எழுப்பி கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். வட்டாட்சியர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனைத் தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் செந்தமிழன், இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சரண், உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மூன்றாவது நாள் விழா நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ள நிலையில், ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமிக்க விழாவை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








