விழுப்புரம் திமுக வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம் – இளைஞரணி நிர்வாகியின் நெகிழ்ச்சி செயல்.
விழுப்புரம் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் லட்சுமணன் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வரும் வேளையில், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சிவமுருகன் என்பவரின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வேட்பாளர் லட்சுமணனின் தீவிர ஆதரவாளரான இவர், தனது சொந்த டாட்டா ஏசி (Tata Ace) வாகனத்தை சுமார் 2 லட்சம் ரூபாய் செலவில் பிரச்சாரத்திற்காக பிரத்யேகமாக வடிவமைத்துள்ளார். தற்போது அந்த வாகனத்தின் தரம் மற்றும் வசதிகளைச் சரிபார்க்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். கட்சியின் வெற்றிக்காகத் தனது சொந்த நிதியில் வாகனத்தைத் தயார் செய்த சிவமுருகனின் இந்த அர்ப்பணிப்பு உணர்வு, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
















