புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன் பாகிஸ்தானுக்கு தகவல் வழங்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சுமத்தியது குறித்து, “அது முற்றிலும் உண்மையற்றது” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கண்டித்தார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து பார்லிமென்ட் ஆலோசனைக் குழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் பேசிய ஜெய்சங்கர் கூறியதாவது :
“ஆபரேஷன் சிந்தூர் நடப்பதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எந்தவிதமான தகவலும் அளிக்கப்படவில்லை. நடவடிக்கை முடிந்த பின்பே தகவல் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் உண்மையை முற்றிலும் மாறுபட்ட விதத்தில் சித்தரிக்கின்றன.”
பாகிஸ்தான் பரப்பும் போலிச் செய்திகள் தொடர்பாக, “இந்திய அரசு அவற்றை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் போது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்களை இந்திய பாதுகாப்புப் படைகள் துல்லியமாக தாக்கியதாக அவர் கூறினார். “இந்த அளவிலான நடவடிக்கையை கடந்த எந்த அரசும் மேற்கொள்ளவில்லை,” என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
பல்வேறு நாடுகளின் அணுகுமுறையையும் விளக்கிய அவர், “உலகில் உள்ள 200 நாடுகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மூன்று நாடுகள் மட்டுமே நின்றன. இது இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை உலகம் மதிக்கிறது என்பதற்கான சான்றாகும்” என தெரிவித்தார்.
சிந்து நதி ஒப்பந்தம் தொடர்பாகவும் கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், “இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதன் தாக்கம் அடுத்த சில நாட்களில் தெரியும். பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவரும் வரை, ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் தவிர, அவர்களுடன் வேறு எந்த பேச்சுவார்த்தையும் இருக்காது,” எனத் தெரிவித்துள்ளார்.