மயிலாடுதுறையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பாளர் போக்ஸோ சட்டத்தில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்;-
மயிலாடுதுறையில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மயிலாடுதுறை நகர தலைவர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது ரஃபீக்(52). இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவரான இவர் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார். இதில் 16 வயது சிறுமி வேலை பார்த்துள்ளார். பெற்றோரை பிரிந்து வந்த அச்சிறுமியை தனியார் பெண்கள் காப்பகத்தில் சேர்த்து முகம்மது ரஃபீக் உதவி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அச்சிறுமியிடம் முகம்மது ரஃபீக் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் நேரில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சங்கீதா மற்றும் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து முகம்மது ரஃபீக்கை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, பின்னர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

















