புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைய திட்டத்தின் படியும், புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி கே. பூரண ஜெய ஆனந்த் ஆகியோரின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் படி, அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இந்த நிகழ்வு மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியை அறந்தாங்கி வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான உமா மகேஸ்வரி கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார். அறந்தாங்கி மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவகாமசுந்தரி முன்னிலை வகித்த இந்த நிகழ்வில், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சாலை பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள், அறந்தாங்கி நைனா முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவிகள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள் திரளாகக் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். அப்போது தலைமை உரையாற்றிய சார்பு நீதிபதி உமா மகேஸ்வரி, சாலையில் பயணிக்கும் போது ஒவ்வொரு குடிமகனும் மிகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்றும், பிறருக்கு விபத்து ஏற்படாத வண்ணம் சாலை விதிகளைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே விபத்துக்களிலிருந்து நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் தற்காத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பேருந்து நிலையம் வரை சென்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். இந்த நிகழ்வில் அறந்தாங்கி வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன், அறந்தாங்கி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து செயற்பொறியாளர் சண்முகசுந்தரம், இளங்கோவன் மற்றும் வட்டச் சட்டப் பணிகள் குழுவின் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பேரணியின் நிறைவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதுக்கோட்டை கிளை சார்பாகச் சாலை பாதுகாப்பு விதிகள், போக்குவரத்து குறியீடுகள் மற்றும் சிக்னல்கள் குறித்து விளக்கும் வகையில் ஒரு விழிப்புணர்வு பேருந்து கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை மாணவிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு சாலை விதிகள் குறித்த நுணுக்கமான தகவல்களைக் கேட்டறிந்தனர். அறந்தாங்கி வட்ட சட்டப்பணிகள் குழுவினர் செய்திருந்த இந்தச் சிறப்பான ஏற்பாடுகள் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
















